ஆம்லெட்டில் உப்பு இல்லாததால் தகராறு: புதுவை அருகே மதுக்கடை பார் மீது வெடிகுண்டுகள் வீச்சு

திருபுவனை அருகே ஆம்லெட்டில் உப்பு போடாததால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து மதுக்கடை பார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆம்லெட்டில் உப்பு இல்லாததால் தகராறு: புதுவை அருகே மதுக்கடை பார் மீது வெடிகுண்டுகள் வீச்சு
Published on

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் பார் வசதியுடன் கூடிய தனியார் மதுக்கடை உள்ளது. இங்கு விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 பேர் நேற்று காலை மதுகுடிக்க வந்தனர். பாரில் இருந்தவர்களிடம் மதுபோதையில் ஆம்லெட் கேட்டனர். அப்போது அவர்களுக்கு கொடுத்த ஆம்லெட்டில் உப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி கேட்டு சமையல் மாஸ்டருடன் தகராறு செய்தனர். இதையடுத்து உப்பு போட்டு வேறு ஆம்லெட் வழங்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை பார் ஊழியர்கள் கண்டித்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஒருவரை ஒருவர் கைகலப்பில் இறங்கினர். இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றனர்.

அத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது என்று கருதிய நிலையில் மாலை 5.30 மணியளவில் மீண்டும் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் மதுக்கடை பாருக்கு வந்தனர். பார் ஊழியர்கள் மற்றும் சமையல் மாஸ்டர் மீது ஆத்திரத்தில் இருந்த அவர்கள், சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

இதில் 2 வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. ஒரு குண்டு வெடிக்காமல் கீழே விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். வெடிகுண்டுகள் வெடித்ததில் மதுபாரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த நேரத்தில் பாரில் மதுபானம் குடித்துக்கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். வெடிகுண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தநிலையில் அந்த ஆசாமிகள் வெடிக்காமல் கீழே கிடந்த வெடிகுண்டை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு வீச்சில் சேதமடைந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். வெடிகுண்டுகளின் துகள்களை ஆய்வுக்காக சேகரித்து எடுத்துச் சென்றனர்.

அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் அந்த நபர்களின் படங்கள் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்து, அதன் மூலம் அடையாளம் கண்டு, அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதுபான பார் மீது வீசப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகளும் சக்தி குறைந்தவையாகும். இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மதுபான பார் ஊழியர்களை மிரட்டுவதற்காக இந்த குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மதுக்கடை பார் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் திருபுவனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com