அம்மா உணவகங்களில் தூய்மை பணியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்: நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தல்

அம்மா உணவகங்களில் தூய்மை பணியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும் என நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தினார்.
அம்மா உணவகங்களில் தூய்மை பணியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்: நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தல்
Published on

தர்மபுரி,

தர்மபுரி நகராட்சி பகுதியில் செயல்படும் அம்மா உணவகங்களில் தூய்மை பணியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும் என்று நேரில் ஆய்வு நடத்திய நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் அசோக்குமார் அறிவுறுத்தினார்.

தர்மபுரி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை சேலம் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், மண்டல பொறியாளர் கமலநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பஸ்நிலையம் ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதை கருத்தில் கொண்டு அங்கு அவ்வப்போது தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். அம்மா உணவகங்களில் போதிய அளவில் உணவு பொருட்களின் இருப்பை பராமரிக்க வேண்டும், என்று அவர் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி நகரில் செயல்படும் தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார். ஏ.டி.எம். மையங்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்த மையங்களில் அவ்வப்போது கிருமிநாசினிகள் தெளித்து பராமரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தினார்.

தர்மபுரி நகர பகுதியில் முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா, சுகாதார அலுவலர் ரமணசரண் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com