அம்மாபேட்டை, அந்தியூரில் சூறாவளி காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

அம்மாபேட்டை, அந்தியூரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
அம்மாபேட்டை, அந்தியூரில் சூறாவளி காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
Published on

ஈரோடு,

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் இரவு 7 மணி அளவில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது.

இந்த மழை இரவு 10 மணி வரை நீடித்தது. பின்னர் விட்டுவிட்டு பெய்துகொண்டே இருந்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் சிங்கம்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, பூனாச்சி, குறிச்சி, சித்தார், குருவரெட்டியூர் ஆகிய பகுதிகளிலும் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

ஆனந்தம்பாளையம், மாணிக்கம்பாளையம், சொட்டையனூர், ஆட்டக்காலனூர், காட்டூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் வீசிய சூறாவளிக்காற்றினால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளான ராமச்சந்திரன், ஈஸ்வரன் ஆகியோர் கூறுகையில் நாங்கள் கடன் வாங்கித்தான் வாழை பயிரிட்டோம். ஆனால் சூறாவளிக்காற்றில் அனைத்து வாழைகளும் நாசமாகிவிட்டன. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே வாழைகளை இழந்த எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர்.

இதேபோல் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம், தாளபாளையம், கூனக்காபாளையம் ஆகிய பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசம் ஆனது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக விலைக்கு தண்ணீர் வாங்கி பாய்ச்சினோம். ஆனால் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக ஏராளமான வாழைகள் சாய்ந்துவிட்டன. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அதனால் அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com