அம்மாபேட்டை மண்டல அலுவலகம்: கழிப்பிடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை

கழிப்பிடம் கட்டித்தரக்கோரி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அம்மாபேட்டை மண்டல அலுவலகம்: கழிப்பிடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை
Published on

சேலம்,

சேலம் மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட சங்கிலி ஆசாரி கரடு, குண்டுக்கல்காடு, அப்துல்கலாம் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் கழிப்பிட கட்டிடம் ஒரு இடத்தில் கூட இல்லை. இங்கு வசிக்கும் அனைவரும் காடு, முள் பகுதியைத்தான் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியில் உள்ள முள்செடிகள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டன.

இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். குறிப்பாக பெண்கள் அதிகம் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மழை காலத்தில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே எங்கள் பகுதிக்கு கழிப்பிட கட்டிடம் மற்றும் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்ககோரி மாநகராட்சி, மண்டல அலுவலகம் ஆகியவற்றில் பலமுறை மனு கொடுத்துள்ளோம்.

மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தி உள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சேலத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதாக கூறுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் விரைவில் கழிப்பிட கட்டிடம் கட்டித்தரக்கோரி முற்றுகையிட்டு உள்ளோம் என்று கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையாளர் ஜெயராஜ், முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கழிவறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் தனக்கு சொந்தம் என்று ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால்தான் கழிவறை கட்ட முடியவில்லை என்று கூறினார். அப்போது விரைவில் கழிப்பிடம் கட்டித்தர வில்லை என்றால் மாநகராட்சி, மண்டல அலுவலகங்களில் காலைகடன் கழிக்கும் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் கூறினர்.

அப்போது இன்னும் 10 நாட்களுக்குள் வழக்கு முடிந்துவிடும். அதன்பிறகு விரைந்து கழிப்பிட கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலை அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com