வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த தடை மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவு

முத்துராமலிங்கதேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த தடை விதித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.
வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த தடை மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவு
Published on

புதுக்கோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்த நாள் மற்றும் 56-வது குரு பூஜை விழா நடக்கிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பசும்பொன் கிராமத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து செல்லும் வாகனங்களையும், இம்மாவட்டத்திற்கு வடக்கில் உள்ள மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை வழியாகச் செல்லும் வாகனங்களையும் பாதுகாப்பாக அனுப்புவதற்கு ஏற்றவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சோதனைச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் நிர்வாக நீதிபதிகளை நியமனம் செய்ய இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ குழு மற்றும் அவசர கால ஊர்திகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து செல்லும் வாகனங்களுக்கு காவல் பாதுகாப்பு வாகனங்கள் மூலம் முன்னும் பின்னும் பாதுகாப்புடன் சென்று வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருபூஜைக்கு செல்லும் வாகனங்களில் ஏணிகள் ஏதும் இருக்க கூடாது. மேலும் வாகனங்களில் மது பாட்டில்கள் எடுத்து வருவதை தடுக்கும் வகையில் கண்காணித்திட வேண்டும். வாகனங்களின் கூரையின் மேல் பயணம் செய்வது, ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துதல் போன்றவற்றையும் தடை செய்யப்பட்டுள்ளது.

இன உணர்வுகளை தூண்டும் வகையில் வாசகங்கள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்து பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாத வகையில் தேவர் ஜெயந்தி விழாவினை சிறப்பாக கொண்டாடிட தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் டெய்சிகுமார், ஜெயபாரதி, பஞ்சவர்ணம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் உயர் அதிகாரிகள், போக்குவரத்து பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com