ஆண்டிப்பட்டி, கம்பம் பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் ரூ.6¼ லட்சம் பறிமுதல்

ஆண்டிப்பட்டி, கம்பம் பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் ரூ.6¼ லட்சம் சிக்கியது.
ஆண்டிப்பட்டி, கம்பம் பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் ரூ.6¼ லட்சம் பறிமுதல்
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி போலீஸ் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கலைச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மதுரை வழியாக ஆண்டிப்பட்டி வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் உரிய ஆவணம் இன்றி ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 300 இருந்தது. அதனை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காரில் வந்த சென்னை திருமுக்கூர் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது 36) என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கேரள மாநிலம் வாகை பகுதியை பூர்வீகமாக கொண்ட மனோஜ், அந்த பகுதியில் நிலம் வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் ஆவணங்களை காட்டி விட்டு பணத்தை வாங்கி செல்லுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து அந்த பணம், ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் கம்பம்மெட்டு அடிவாரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜயன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் வந்த கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடுப்பன்சோலை தாலுகா தூக்குபாலம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (53) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், ஏலக்காய் விற்ற பணத்தை தூக்குபாலம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் கருவூலத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com