

தேவாரம்,
தேவாரம் பேரூராட்சி பகுதியான மூணான்டிபட்டியில் 1985-ம் ஆண்டு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் கொடுத்து கல்வி கற்று தருகின்றனர். இங்கு வரும் குழந்தைகளுக்கு தினந்தோறும் மதிய உணவு மற்றும் சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் ஜன்னல்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் அறையின் தரைப்பகுதியும் சேதமடைந்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது ஊராட்சி ஒன்றியங்களில் கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள் பழுது அடைந்து இருந்தால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சேதமடைந்த கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்ட போது, இங்குள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் சில நாட்களுக்கு குழந்தைகளை அனுப்பவில்லை. பின்னர் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும், குழந்தைகளை மையத்துக்கு அனுப்பி வையுங்கள் இல்லை என்றால் மையத்தை எடுத்துவிடுவார்கள் என்று மைய பொறுப்பாளர் கூறினார். இதனால் குழந்தைகளை மையத்துக்கு அனுப்பி வருகிறோம்.
தற்போது இந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கட்டிடத்தின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் எந்த நேரமும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.