

புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் பேசியதாவது:-
கீதா ஆனந்தன் (தி.மு.க.): விழுதியூர், திருமலைராயன் பட்டினத்தில் பல்வேறு இடங்களில் வீடுகட்டுவதற்கு தேவையான மணல் உள்ளது. அதை எடுத்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். வருவாய்த்துறை அதிகாரிகள் லாரிகளில் மணல் ஏற்றி வருபவர்களை விட்டுவிட்டு சிறிய வண்டிகளில் ஏற்றி வருபவர்களை பிடிக்கிறார்கள்.
பொதுப்பணித்துறை, மின்துறை என எந்த துறைகளை எடுத்தாலும் காரைக்காலில் ஒரு வேலை செய்யவேண்டுமானால் அதற்கு ஒப்புதல் பெற புதுச்சேரிக்குத்தான் வரவேண்டி உள்ளது. அதேபோல் சாலை போக்குவரத்து கழகத்தில் ரூ.86 லட்சம் வசூலாகிறது. ஆனால் அங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.26 லட்சம்தான். அதுவும் உரிய நேரத்தில் தரப்படுவதில்லை. சாலைப்போக்குவரத்து கழக பஸ்கள் சரிவர இயக்கப்படாமல் தனியாருக்கு சாதகமான நிலை நீடிக்கிறது.
காரைக்காலுக்கு தனி மாவட்ட அந்தஸ்து எப்போது வழங்கப்படுகிறதோ அப்போதுதான் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்தோ, மாநில அந்தஸ்தோ கிடைக்கும். கிராமப்புற பள்ளிகளில் போதிய மேஜை, நாற்காலி வசதி இல்லை. வாஞ்சியூர் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்றவேண்டும். மின்துறை செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களை வாரம் ஒருமுறை காரைக்காலுக்கு வந்து செல்ல உத்தரவிடவேண்டும்.
டி.ஆர்.பட்டினத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கவேண்டும். காரைக்காலுக்கு தேவையான அரிசியை கொள்முதல் செய்யும் திறமை அங்குள்ள விவசாயிகளிடம் உள்ளது. எனவே இலவச அரிசி திட்டத்துக்கு அங்குள்ள விவசாயிகளிடமே கொள்முதல் செய்யவேண்டும்.
அசனா (அ.தி.மு.க.): சுற்றுலாத்துறையில் காரைக்காலுக்கு என ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? காரைக்கால் துறைமுகத்தை அழகுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதந்தோறும் தவறாமல் சம்பளம் வழங்கவேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு உரிய வாடகையை அரசு தரவேண்டும். இப்போது ஊழியர்களே அந்த வாடகை தொகையை தரும் அவலம் இருந்து வருகிறது.
இலவச அரிசியை தவறாமல் கொடுத்தால் இந்த அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மின்துறையில் இரவில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய தனிப்பிரிவு தொடங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை, அவர்களுக்கு உரிய சம்பளத்தை மாதந்தோறும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் கமலக்கண்ணன், இந்த பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதும் அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும் என்று கூறினார்.