

சென்னை,
மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று காலை திருத்தணி ரெயில் நிலையத்தில் தலித் மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் 50 பேர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அனிதா சாவுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கு இருந்த போலீசார், ரெயில் மறியலை கைவிடும்படி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை அவர்கள் ஏற்காததால் ரெயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த ரெயில் மறியல் போராட்டம் காரணமாக கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக திருத்தணியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.