

விழுப்புரம்,
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை.தேர்வு செய்த விவரத்தை கூட அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். 177.25 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அதனை தட்டிக் கழிப்பதற்காகவே சாக்கு, போக்குகளை சொல்லி வருகின்றனர்.
இந்த வழக்கில் சட்ட வல்லுனர்களை மாற்றம் செய்ததால் எந்த இடர் பாடும் இல்லை. பொதுவாகவே ஆட்சிகள் மாறும்போது அரசு வக்கீல்கள் மாறிக்கொண்டுதான் இருப்பார்கள். இது காலம், காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே வாதாடிய வக்கீல் இறந்துவிட்டார். அதனால் தற்போது வேறு வக்கீல் மாற்றம் செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. தேர்வு செய்த விவரத்தை கூட அரசுக்கு தெரிவிக்கவில்லை. இருப்பினும் அண்டை மாநிலத்தவர்களை நியமனம் செய்தது வருந்தத்தக்க ஒன்றுதான். பல அறிஞர்கள் பிறந்த தமிழகத்தில் இருந்து, இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ள நம் மாநிலத்தில் இருந்து துணை வேந்தர்கள் தேர்வு செய்யாதது வருத்தமாக உள்ளது என அவர் கூறினார்.