புயல் நிவாரண தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

புயல் நிவாரண தொகை அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
புயல் நிவாரண தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Published on

திருவாரூர்,

காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில துணை செயலாளர் வரதராஜன், துணை தலைவர் செந்தில், மாவட்ட தலைவர் சுப்பையன், பொருளாளர் அகஸ்டின் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாமகேஸ்வரியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:- கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 10 முதல் 40 ஆண்டுகள் வளர்ந்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. வாழை, மா போன்ற மரங்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் இடிந்துள்ளன. மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல.

எனவே நிவாரண தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். அதேபோல கரும்பு, தென்னை, மா, பலா, வாழை, சவுக்கு மரங்களுக்கும் நிவாரண தொகையை கூடுதலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிசை, ஓட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம மூலம் செயல் படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com