விடுமுறை நாட்களை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து - இணை ஆணையர் தகவல்

அருணாசலேஸ்வரர் கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் தெரிவித்து உள்ளார்.
விடுமுறை நாட்களை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து - இணை ஆணையர் தகவல்
Published on

திருவண்ணாமலை,

விடுமுறை நாட்களை முன்னிட்டு நாளை முதல் 1-ந் தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் அண்ணாமலையார் மலை என்று கூறப்படும் மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6.30 மணி வரை நடைபெற உள்ளது.

அரசு விடுமுறை நாளில் பவுர்ணமி வருவதால், அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை அரசு விடுமுறை நாட்களாகும். இதனால் இந்த 4 நாட்கள் கோவில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை என 4 நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com