அந்தியூர், அம்மாபேட்டை ஒன்றியங்களில் 76 இடங்களில் ரூ.1¼ கோடியில் சிறு தடுப்பணைகள் கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டார்

அந்தியூர், அம்மாபேட்டை ஒன்றியங்களில் 76 இடங்களில் ரூ.1¼ கோடியில் கட்டப்பட்டு உள்ள தடுப்பணைகளை கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டார்.
அந்தியூர், அம்மாபேட்டை ஒன்றியங்களில் 76 இடங்களில் ரூ.1¼ கோடியில் சிறு தடுப்பணைகள் கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டார்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்ட வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் பல்வேறு திட்டப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிறு தடுப்பணைகள் கட்டுவது, புதிய பண்ணை குட்டைகள் அமைப்பது. கதிர் அடிக்கும் களங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான திட்டப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று பார்வையிட்டார். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ஆகிய துறைகள் மூலம் செய்யப்பட்டு உள்ள பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதற்காக நேற்று அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதிக்கு சென்ற கலெக்டர், அங்கு விவசாயி ராஜசேகரன் என்பவர் பயிரிட்டு உள்ள ராகி வயலுக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டு உள்ள ராகி விதைப்பண்ணையை பார்வையிட்டு அதுபற்றி விவசாயி மற்றும் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.

அதைத்தொடர்ந்து புதுப்பாளையம் வனத்துக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டு உள்ள கதிரடிக்கும் களத்தை பார்வையிட்டார். அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சிறு தடுப்பணையையும் கலெக்டர் எஸ்.பிரபாகர் கேட்டு அறிந்தார்.

பின்னர் வெள்ளித்திருப்பூர் பகுதிக்கு சென்ற கலெக்டர் அங்குள்ள குரும்பம்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள பண்ணை குட்டையை பார்வையிட்டார். அங்கிருந்து அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூர் பகுதிக்கு சென்ற அவர் சொட்டு நீர் பாசனம் மூலம் புதிதாக நடவு செய்யப்பட்டு உள்ள வாழைக்கன்றுகளை பார்வையிட்டார்.

விவசாயிகள் நடவு செய்து உள்ள வாழை என்ன ரகம், ஒரு ஏக்கருக்கு எத்தனை கன்றுகள் நடவு செய்யப்படும் என்பதை ஆர்வமுடன் கேட்டு அறிந்த கலெக்டர் எஸ்.பிரபாகர், விவசாயிகளுடன் தோட்டத்துக்குள் சென்று நடவு செய்த வாழைக்கன்றுக்கு சொட்டு நீர் பாசனம் சரியாக கிடைக்கிறதா? என்பதையும் உட்கார்ந்து பார்த்தார். இதுபோல் அருகில் உள்ள கேசரிமங்கலம் பகுதியில் ஏற்கனவே ஒரு ஆண்டாக சொட்டு நீர் பாசனத்தில் வாழை, கரும்பு, காய்கறிகள், மரவள்ளிக்கிழக்கு பயிரிட்டு வரும் விவசாயி மணி என்பவரின் தோட்டத்திலும் கலெக்டர் பார்வையிட்டு விவரங்கள் கேட்டு அறிந்தார்.

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாய பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் பல திட்டங்கள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. அந்தியூர், அம்மாபேட்டை, தாளவாடி ஒன்றிய பகுதிகளில் அதிக அளவில் சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. இதில் அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களில் மட்டும் 76 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு தடுப்பணையும் தலா ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ளன. அதன்படி இந்த 2 ஒன்றியங்களில் மட்டும் ரூ.1 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் செலவில் சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த தடுப்பணைகள் மூலம் ஓடையில் வீணாக செல்லும் தண்ணீர் ஆங்காங்கே சேமிக்கப்பட்டு நிலத்தடி நீராக மாற்றப்படுகிறது. இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்காக ஆழ்குழாய்கள் அமைத்து தண்ணீர் நிலத்துக்குள் செல்ல போதிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் அதிகம் ஊற்றெடுக்கும் வசதி ஏற்பட்டு உள்ளது.

இதுபோல் விவசாய தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் வழங்கும் திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 106 குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு தலா ரூ.65 ஆயிரம் வீதம் செலவிடப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் பங்காக 10 சதவீத தொகை பெறப்பட்டு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை குட்டைகளை அமைத்து இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் செறிவூட்டப்படுகிறது.

சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் ராகி உள்ளிட்ட சிறுதானிய பயிர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் செய்யப்பட்டு வந்த இந்த திட்டம் அந்தியூர் வட்டாரத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. புதுப்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் சுமார் 1 ஏக்கர் வயலில் ராகி பயிரிட்டு உள்ளார். இது விதைப்பண்ணையாக அடையாளம் காணப்பட்டு அதற்கான உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு இருக்கிறது. இங்கு விளையும் ராகி, விதைச்சான்று மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், மற்ற விவசாயிகளுக்கு இங்கிருந்து விதை ராகி விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தாளவாடியில் கடந்த ஆண்டு 3 டன் ராகி அறுவடை செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com