விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது - அமைச்சர் தங்கமணி பேட்டி

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது - அமைச்சர் தங்கமணி பேட்டி
Published on

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள சோழசிராமணியையும், ஈரோடு மாவட்டம் பாசூரையும் இணைக்கும் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மின் உற்பத்தி கதவணை பாலத்தின் இணைப்பு சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

சாலையை சரிசெய்யும் பணிகளை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாசூர் கதவணை பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவு சரிசெய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் எப்போதும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் சாலைகள் சரி செய்யப்படும். மக்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் 10 நாட்களில் போக்குவரத்து சரி செய்யப்படும்.விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது. விளை நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்காக விளை நிலத்திற்கும், தென்னை மரங்களுக்கும் உரிய இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கப்படும். விவசாயிகள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர்.

அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்திலும் அதிக இடங்களில் விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பாதிக்கட்டும் என்ற எண்ணம் என்றைக்கும் இந்த அரசுக்கு கிடையாது. தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.37 ஆயிரத்து 600 இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வில் தலைமை பொறியாளர் தண்டபாணி, உதவி செயற் பொறியாளர் சித்திரபுத்தன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com