24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி: தமிழக அரசின் உத்தரவுக்கு வணிகர்கள் வரவேற்பு

24 மணி நேரமும் கடைகள் திறக்க பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவை வணிகர்கள் வரவேற்றுள்ளனர்.
24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி: தமிழக அரசின் உத்தரவுக்கு வணிகர்கள் வரவேற்பு
Published on

கரூர்,

24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி வந்தது. தற்போது தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கி இருப்பதை வரவேற்கிறோம். இந்த அரசாணையால் வெகுகாலமாக பாதிக்கப்பட்டு வந்த இரவு நேர டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் நெடுஞ்சாலை கடைகள் நடத்தும் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

24 மணி நேரமும் இயங்கும் கடைகளில் குறைந்தபட்சம் 10 பேர் பணியாற்ற வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. சாதாரண டீக்கடையில் 10 பேருக்கு குறைவாகவே பணியாற்றுவர். இதனால் சாதாரண டீக்கடை நடத்துபவர்கள் 24 மணி நேரமும் கடையை திறந்து வைக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, சாமானிய வணிகர்களும் பயன்பெறும் வகையில் இந்த அரசாணையில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று காவல்துறையினரின் அத்துமீறல் இல்லாத வகையில் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது:-

வணிகர்களுக்கு முன்பு லைலென்சு வழங்கியபோது இரவு 1.30 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால் இரவு கடை திறந்திருந்தால் வியாபாரிகளை அவதூறாக திட்டுதல், வழக்கு போடுதல் என்று போலீசார் அத்துமீறல் இருந்தது. ஆனால் தற்போது திடீரென்று 24 மணி நேரமும் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

ஆன்-லைன் வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளன. எனவே வெளிநாட்டு வணிகத்தை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கருதுகிறது. ஏற்கனவே உள்நாட்டு வணிகம் அழிந்து வருகிறது. எனவே இந்த உத்தரவால் சாமானிய வணிகர்கள் பெரிதும் பயன்பெற போவது இல்லை.

பணக்கார நாடுகளில் இருந்து மத்திய அரசுக்கு உத்தரவுகள் வருகிறது. மத்திய அரசு அதனை தமிழக அரசு மீது திணிக்கிறது. எனவே மத்திய-மாநில அரசுகள் சுய சிந்தனையுடன் இந்த முடிவை எடுக்கவில்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கரூரை சேர்ந்த மருந்து வணிகர் மேலை பழனியப்பன் கூறுகையில், அரசின் இத்தகைய அறிவிப்பால் அனைத்து வணிகர்களும் இரவு கடையை திறப்பார்கள் என எண்ண முடியாது. ஆனால் மருந்து கடைகள் இரவில் திறந்திருந்தாலும், அங்கு கொள்முதல் செய்ய மக்கள் வருவார்கள். இதனால் மருந்து தட்டுப்பாடின்றி அவர்களுக்கு கிடைப்பதால் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும். அதோடு மருந்து வணிகமும் மேம்படும். பொதுமக்களுக்கு திடீரென காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகள் இரவில் ஏற்பட்டால் கூட உடனடியாக மருந்து வாங்கி கொள்ளக்கூடிய சூழல் ஏற்படுகிறபோது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனினும் இரவு நேரத்தில் பணத்தை வைத்துக்கொண்டு பொருட்கள் வாங்க வருவோரிடம் வழிப்பறி உள்ளிட்டவை நடைபெறாமல் தடுப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

குளித்தலையை சேர்ந்த ஓட்டல் கடைக்காரர் கே.எஸ்.எம். சர்புதீன் கூறுகையில், 24 மணிநேரமும் கடைகள் திறந்திருந்தால் திருட்டு சம்பவங்கள் முற்றிலும் குறையும். பொதுமக்களின் பாதுகாப்பு அதிகரிக்கும். ஓட்டல்கள் திறந்தே இருப்பதால் வெளியூரில் இருந்து நள்ளிரவில் பஸ் மற்றும் ரெயில்களில் பயணம் செய்து பல ஊர்களுக்கு சென்று வருபவர்களுக்கு அவர்களின் பசியை போக்க எளிதாக உணவு கிடைக்கும். உணவுக்காக அவர்கள் பல இடங்களில் அலையத்தேவையில்லை. கடைகள் திறந்து இருப்பது பலவகையில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

குளித்தலையில் மளிகைக்கடை வைத்து நடத்தி வரும் கிரி கூறுகையில், 24 மணிநேரமும் கடைகளை திறந்திருந்தால் எந்தவித பொருட்களும் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது. சிறிய நகரப்பகுதியில் பஸ்நிலையம் போன்ற முக்கிய இடங்களில் அமைந்துள்ள டீ, பெட்டிக்கடைகள், மெடிக்கல், ஓட்டல் போன்ற குறிப்பிட்ட கடைகள் திறந்திருந்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இவை தவிர மற்ற கடைகள் திறந்து வைப்பதால் பெரிய அளவில் விற்பனை எதுவும் நடைபெறப்போவதில்லை என்று தெரிவித்தார்.

கரூர் காமாட்சியம்மன் கோவில் தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வரும் சந்திரசேகர் கூறுகையில், தற்போதைய நாகரிக உலகில் காலை முதலே பலரும் எந்திரமாக சுழன்று வேலைக்கு செல்கிறார்கள். இதனால் பலருக்கும் முடி திருத்தம் செய்தல், சேவிங் செய்தல் ஆகியவற்றுக்கு நேரம் கிடைப்பதில்லை என்றே கூறுகின்றனர். இதனால் இரவில் பணி முடிந்த பிறகு தான் சலூன் கடை பக்கம் எட்டி பார்க்கிறார்கள். இரவில் அதிகளவில் ஆட்கள் வருவதால் சிரமம் ஏற்படுகிறது. எனவே 24 மணி நேரமும் கடையை திறக்கலாம் என்கிற அறிவிப்பு வரவேற்தக்கதக்கது ஆகும். இதன் மூலம் சலூன்கடைக்காரர்களுக்கு வருமானம் பெருகும். எனினும், இந்த அறிவிப்பினால் மக்கள் நடமாட்டமும் முக்கிய இடங்களில் அதிகரிக்கக்கூடும். அப்போது குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூரில் மெத்தை விரிப்பு, போர்வை, திரைச்சீலை உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவில் செயல்படுகின்றன. தொழில் வளத்தை பெருக்க 24 மணி நேரமும் பணி செய்யலாம் என அரசு அறிவித்துள்ளதால், வெளிநாட்டு ஆர்டர்களை குறித்த நேரத்தில் அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும். இதன் மூலம் தொழிலாளர்களின் தேவை அதிகரிப்பதால் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்திவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். டெக்ஸ்டைல் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பெண்கள் அதிகளவில் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com