அரக்கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் 94 சதவீதம் நிறைவு ஆணையாளர் தகவல்

அரக்கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் 94 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஆணையாளர் சண்முகம் தெரிவித்தார்.
அரக்கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் 94 சதவீதம் நிறைவு ஆணையாளர் தகவல்
Published on

அரக்கோணம்,

அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகளில் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரக்கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிக்காக ரூ.95 கோடியே 51 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டு 36 வார்டுகளிலும் குழாய்கள் பதிக்கும் பணிகள், கழிவுநீர் தொட்டிகள், கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளது. நகராட்சியில் 69 ஆயிரத்து 41 மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள், 2 ஆயிரத்து 769 ஆழ்நுழை தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

காலிவாரிகண்டிகை பகுதியில் தலைமை கழிவுநீர் நீரேற்று நிலையம், காமராஜ் நகர், சோமசுந்தரம் நகர் பகுதிகளில் துணை கழிவுநீர் நீரேற்று நிலையங்களும், ஜெய்பீம் நகரில் லிப்டிங் நீரேற்று நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அரக்கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 94 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பாதாள சாக்கடை குழாய்களுடன் வீட்டின் கழிவுநீர் இணைப்பை இணைக்க வீட்டின் உரிமையாளர்கள் பணம் கட்டி இணைத்து கொள்ள நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதாள சாக்கடை குழாயுடன் வீட்டின் இணைப்பை இணைக்க ரூ.13 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரம் வீடுகளுக்கு வெளிப்புறத்தில் இருந்து வீட்டின் உள்புறம் வரை இணைப்பு கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதில் ஆயிரத்து 400 இணைப்புகள் வெளிப்புற இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுபட்ட வீடுகளை கணக்கெடுத்து அந்த வீட்டிற்கு வெளிப்புற இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு வீட்டின் இணைப்பிற்கு குறைந்தபட்ச வைப்புத்தொகையாக (டெபாசிட்) ரூ.5 ஆயிரமும், இணைப்பு கட்டணமாக ரூ.6 ஆயிரமும் செலுத்த நகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பணத்தை வீட்டின் உரிமையாளர்கள் மொத்தமாகவும் செலுத்தலாம். மொத்தமாக கொடுக்க முடியாத உரிமையாளர்கள் தவணை முறையில் செலுத்த நகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. 8 முதல் 10 மாத தவணைக்குள் பணத்தை பொதுமக்கள் செலுத்தலாம். டெபாசிட் தொகை இடங்களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.

வெளிப்புற குழாய் இணைப்புகள் இணைக்கப்பட்ட பின்னர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின்னர் வெளிப்புறத்தில் இருந்து வீட்டின் உள்பகுதிக்கு இணைப்பு கொடுக்கப்படும்.

பின்னர் நகராட்சியில் அனைத்து தெருக்களிலும் படிப்படியாக சிமெண்டு சாலைகள் போடப்பட்டு பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேற்கண்ட தகவலை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சண்முகம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com