அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல்: காந்தி வேடமணிந்து சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காந்தி வேடமணிந்து வந்து சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல்: காந்தி வேடமணிந்து சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல்
Published on

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்த அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர் ரமேஷ் (வயது 39), மகாத்மா காந்தி போல் வேடமணிந்து வந்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலால் உதவி ஆணையருமான மீனாட்சி பெற்று கொண்டார்.

100 சதவீத வாக்குப்பதிவு

வேட்பு மனு தாக்கல் செய்த பின் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், காமராஜர், மகாத்மா காந்தி, கக்கன் ஆகியோர் போல அனைவரும் எளிமையை கடைபிடிக்க வேண்டும். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் பெறுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எனவே தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்று விவி பேட் எந்திரத்தில் தெரிவதுபோல அதன் அருகிலேயே வாக்களித்தவர் ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரத்தையும் தேர்தல் ஆணையம் வைக்க வேண்டும். இதனால் 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகும் என்றார்.

முஸ்லிம் ஓட்டுகளை கவர வியூகம்

தேர்தல் நடத்தை விதிகள் மே 23-ந்தேதி வரை கரூர் மாவட்டத்தில் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இடைத்தேர்தலையொட்டி ஒரே நேரத்தில் வெளியூர்களில் இருந்து அரசியல் கட்சியினர் அரவக்குறிச்சியில் முகாமிட்டு தேர்தல் களப்பணியாற்றும் சூழல் இருப்பதால் அரசியல் கட்சியினரின் நடவடிக்கையையும் உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி வருகின்றனர்.

ஊரக பகுதிகளில் கட்டிட உரிமையாளர்கள் அனுமதியுடன் சுவர் விளம்பரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், சுவர் விளம்பரம் எழுதுவதில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் முஸ்லிம்கள் கணிசமாக வசித்து வருவதால் இடைத்தேர்தலில் அவர்களது ஓட்டுகளை கவர அரசியல் கட்சியினர் பிரசாரத்தின்போது புது வியூகத்தினை அமைத்து செயல்பட ஆயத்தமாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com