தஞ்சை பெரியகோவிலில் சிதிலமடைந்த சிற்பங்களை சீரமைக்க முடிவு கோபுரங்களை தொல்லியல்துறையினர் அளவீடு செய்தனர்

தஞ்சை பெரியகோவிலில் சிதிலமடைந்த சிற்பங்களை சீரமைக்க முடிவு செய்து கோபுரங்களை தொல்லியல்துறையினர் அளவீடு செய்தனர்.
தஞ்சை பெரியகோவிலில் சிதிலமடைந்த சிற்பங்களை சீரமைக்க முடிவு கோபுரங்களை தொல்லியல்துறையினர் அளவீடு செய்தனர்
Published on

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலை கட்டி தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது.

இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி

பெரியகோவிலில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு வசதியாக கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மராட்டா கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம் ஆகியவை சுத்தப்படுத்தப்பட்டு, மூலஸ்தான கோபுரம் சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோவிலின் வளாகத்தில் கன்னி மூலையில் பெரிய விநாயகர் சன்னதி கோபுரமும் சுத்தப்படுத்தப்பட்டு, முருகன் சன்னதி கோபுரத்தை சுத்தப்படுத்த இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவில் மதில்சுவரை சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. கேரளாந்தகன் கோபுரத்திற்கும், ராஜராஜன் கோபுரத்திற்கும் இடையே பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கற்கள் லேசாக உள்வாங்கி இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.

சிதிலமடைந்த சிற்பங்கள்

இதை தவிர்க்க உள்வாங்கிய கற்களை பெயர்த்து, மண் போட்டு சமப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மேலும் விநாயகர் சன்னதி கோபுரத்தில் சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதேபோல் பிற கோபுரங்களில் லேசாக சிதிலமடைந்து இருக்கும் சிற்பங்களை சீரமைக்க தொல்லியல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோபுரங்களை அளவீடும் செய்யும் பணியில் தொல்லியல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகோவில் வளாகத்தில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுரத்தின் உயரம், அகலம் என்ன? என்று தொல்லியல்துறையினர் அளந்து பார்த்தனர்.

இது குறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறும்போது, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஆயத்தமாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அரைகுறையாக எந்த பணியும் நிறைவுபெறாமல் கும்பாபிஷேகம் நடத்த முடியாது. கோபுரங்களில் சிதிலமடைந்து இருக்கும் சிற்பங்களையும் சீரமைக்க முடிவு செய்து இருக்கிறோம். கும்பாபிஷேகத்திற்கு முன்பாக இந்த பணி நிறைவு பெறும். கோவில் மதில்சுவரில் உள்ள நந்தி சிலைகளில் 52 சிலைகள் தலையின்றி காணப்படுகிறது. இவற்றையும் சீரமைக்க உள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com