

ஊத்தங்கரை,
சாமல்பட்டி அருகே கட்டிட மேஸ்திரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள முக்கரம்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் திருப்பதி பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பதி வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டின் உள்ளே படுத்திருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்து திருப்பதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்து வெளியே வந்தனர். இதைக்கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். சிறிது நேரத்தில் திருப்பதி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருப்பதியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட மேஸ்திரி திருப்பதி தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கட்டிட மேஸ்திரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.