உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதா? அதிகாரிகள் ஆய்வு

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதா? அதிகாரிகள் ஆய்வு
Published on

உடுமலை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் வில்சன் தவறி விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி பகுதிகளிலும் மின்மோட்டார் வைத்து இயக்கப்படும் 375 ஆழ்துளை கிணறுகளும், 175 கைப்பம்பு ஆழ்துளை கிணறுகளும் பயன்பாட்டில் உள்ளன. ஊராட்சிகளுக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில், பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 30 ஆழ்துளை கிணறுகளுக்கு ஏற்கனவே மூடிபோட்டு மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் போட்டுள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு மூடி போடப்பட்டுள்ளதா? என்று உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சுப்பிரமணியம் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது அமராவதி நகர் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆழ்துளை கிணறு மூடி போடப்படாமலிருந்தது கண்டறியப்பட்டது. அந்த ஆழ்துளை கிணற்றிற்கு உடனடியாக மூடிபோடப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

மடத்துக்குளம் அருகே கடத்தூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, காரத்தொழுவு, மைவாடி, பாப்பான்குளம், கொழுமம், சோழமாதேவி, துங்காவி, தாந்தோனி, மெட்ராத்தி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் சரியான முறையில் மூடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யும் வகையில், மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் (கிராம ஊராட்சிகள்), ஆணையர் சிவகுருநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சதீஷ்குமார், சாந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது.மேலும் மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட மடத்துக்குளம் கண்ணாடிபுதூர், கழுகரை, நீலம்பூர், கிருஷ்ணாபுரம், போன்ற அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகள் சரியான முறையில் மூடப்பட்டுள்ளதா? என மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com