ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க எடியூரப்பா தயாரா? சித்தராமையா கேள்வி

மாநிலத்தில் எனது தலைமையிலான அரசு வளர்ச்சி பணிகளை செய்யவில்லை என்று கூறி வரும் எடியூரப்பா, நான் செய்து உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாராக உள்ளாரா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க எடியூரப்பா தயாரா? சித்தராமையா கேள்வி
Published on

கொள்ளேகால்,

முதல்மந்திரி சித்தராமையா நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் கொள்ளேகால் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு வந்தால் முதல்மந்திரி பதவி பறிபோய் விடும் என்று, எனக்கு முன்னால் பதவியில் இருந்தவர்கள் பயந்தார்கள். ஆனால் நான் முதல்மந்திரியாக பதவியேற்ற பின்னர் இந்த மாவட்டத்திற்கு 12 முறை வந்து உள்ளேன். ஆனால் எனது முதல்மந்திரி பதவி பறிபோகவில்லை.

அம்பேத்கர் எழுதிய சம்விதானத்தை மாற்றுவோம் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசியுள்ளார். அவரை உடனடியாக மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும். அவர் ஒரு சாதாரண பஞ்சாயத்து உறுப்பினராக கூட பணியாற்ற தகுதி இல்லாதவர். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரங்களை கையாண்டு தேர்தலில் வெற்றி பெற்று வருவதாக சொல்கிறார்கள். அவர்களின் ராஜதந்திரங்கள் மற்ற மாநிலங்களில் வேண்டும் என்றால் எடுபடலாம். ஆனால் கர்நாடகத்தில் அவர்களின் ராஜதந்திரங்கள் எடுபடாது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா மாநிலம் முழுவதும் உள்ள தலித் மக்களின் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டார். ஆனால் அவர் தலித் மக்கள் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவில்லை. ஓட்டல்களில் இருந்து வாங்கி வந்து தான் சாப்பிட்டார். எதற்காக அவர் மாநில மக்களிடம் இப்படி நாடகம் போடுகிறார்? என்பது தெரியவில்லை.

நான் முதல்மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று எடியூரப்பா குற்றம்சாட்டி வருகிறார். மாநிலத்தில் நான் மேற்கொண்டு உள்ள வளர்ச்சி குறித்து ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க எடியூரப்பா தயாராக உள்ளாரா? பொய்யை மட்டும் பேசி மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று அவர்கள் கனவு கண்டு வருகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

கடந்த முறை தேர்தல் வாக்குறுதியின் போது நாங்கள் 165 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். ஆனால் பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் எங்கள் ஆட்சியின் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

ஆனால் எடியூரப்பா ஊழல் செய்து சிறைக்கு சென்று வந்தவர். அவருக்கு என்னை பற்றியோ, எனது மந்திரிசபையில் உள்ள மந்திரிகளை பற்றியோ பேச எந்த தகுதியும் இல்லை.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்தால், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய தயாராக இருப்பதாக எடியூரப்பா கூறி வந்தார். அதன்படி நாங்கள் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் வரையிலான கடனை தள்ளுபடி செய்து விட்டோம். ஆனால் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது பற்றி டெல்லியில் நான் பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அப்போது அங்கு இருந்த எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பா.ஜனதாவினர் யாரும் கடன் தள்ளுபடி செய்வது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

சாம்ராஜ்நகர் தாலுகாவில் உள்ள 166 கிராமங்களில் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய நாங்கள் பகுகிராம குடிநீர் திட்டத்தை அறிமுகப்படுத்தி அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம். மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் ஓடும் கபினி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு கிராம மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். அது அவர்களுக்கு பகல் கனவாகவே இருக்கும். கண்டிப்பாக அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். பா.ஜனதாவை தோற்கடித்து காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். மக்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளார்கள். காங்கிரஸ் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com