ஹெல்மெட் அணியாமல் வந்து இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்த டிரைவர் கைது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

ஹெல்மெட் அணியாமல் வந்து இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வந்து இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்த டிரைவர் கைது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு
Published on

பூந்தமல்லி,

இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலை அண்ணா வளைவு அருகே நேற்று முன்தினம் அமைந்தகரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் மொபட்டில் வந்த நபரை இன்ஸ்பெக்டர் குமார் மடக்கிப்பிடித்தார். அந்த நபர் போலீசாரிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மொபட்டை நடுரோட்டில் நிறுத்தி விட்டு சென்று விட்டார். இந்த காட்சிகள் சமூகவலைத்தலங்களில் வைரலாக பரவியது. மொபட்டை கைப்பற்றிய போலீசார் அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின்பேரில் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார்.

அப்போது நடுரோட்டில் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் சென்னை அரும்பாக்கம், துரைப்பிள்ளை தெரு, சக்தி நகரை சேர்ந்த ரவீந்திரன் (வயது 53) என்பதும், இவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

மொபட்டின் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையை தொடங்கினோம். அப்போது அந்த மொபட் வேறு ஒருவரின் பெயரில் இருந்தது. அந்த முகவரிக்கு சென்று விசாரித்தபோது தான் ரவீந்திரன் குறித்த தகவல் தெரியவந்தது.

அரும்பாக்கத்தில் குடியிருக்கும் ரவீந்திரனின் வீட்டுக்கு சென்றபோது மீண்டும் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, நான் ஏற்கனவே பிரச்சினையில் உள்ளேன். அவசரத்தில் ஹெல்மெட் அணிய மறந்துவிட்டேன்.

போலீசார் என்னை பிடித்ததும் அவசரமாக செல்வதால் என்னை விட்டுவிடும்படி முதலில் கூறினேன். போலீசாரின் பேச்சு எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தான் நான் அப்படி பேசி விட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். மொத்தத்தில் எனக்கு நேரம் சரியில்லை என்று கூறியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் பிடித்ததும் அவர் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் ஹெல்மெட் அணியாமல் மொபட்டை ஓட்டியதற்காக அபராதம் மட்டும் ரவீந்திரனுக்கு விதிக்கப்பட்டு இருக்கும். ஆனால் நடுரோட்டில் அவர் நடந்துகொண்ட செயலால் தற்போது சிறைக்கு செல்லும் நிலை வந்துள்ளது.

இதையடுத்து ரவீந்திரன் மீது ஹெல்மெட் அணியாமல் மொபட்டை ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com