திருச்சியில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு பயணிகள் வாக்குவாதம்

திருச்சியில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்நிறுவனத்தின் அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு பயணிகள் வாக்குவாதம்
Published on

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், சென்னை உள்பட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் காலை 8.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். இங்கிருந்து காலை 9.25 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டுச்செல்லும். இந்த விமானம் நேற்று காலை 8.35 மணிக்கு திருச்சிக்கு வந்தது. திருச்சியில் இருந்து காலை 9.25 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட ஆயத்தமானது. அதில் பயணம் செய்ய 142 பயணிகள் தயாராக இருந்தனர். ஆனால், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். அதனை சரிசெய்யும் பணி நடைபெற்றது.

பயணிகள் வாக்குவாதம்

இந்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த 142 பேரும் தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். நீண்டநேரம் ஆகியும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் சிலர், மதியம் அந்த விமான நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், குறிப்பிட்ட பயணிகள் இரவு விமானத்தில் அனுப்பி வைக்கப்படு வதாகவும், மீதமிருக்கும் பயணிகள் விமானம் சரி செய்யப்பட்ட பிறகு அல்லது தனி விமானத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்படுவதாகவும் விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com