

அரியலூர்,
அரியலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி அரியலூர்கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-
இந்த ஆண்டு (2018-19) விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழிலுக்கு ரூ.2,149 கோடியே 56 லட்சம் வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு ரூ.39 கோடியும், கல்விக்கடனாக ரூ.31 கோடியே 54 லட்சமும், வீடு கட்ட ரூ.35 கோடி மற்றும் பிற முன்னுரிமை தொழில்களுக்கு ரூ.47 கோடியே 25 லட்சமும் வழங்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போன்று நபார்டு வங்கி மூலம் பகுதி மேம்பாட்டு திட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய தாலுகாக்களில் சிறிய மற்றும் பெரிய மாட்டு பண்ணைகள் அமைக்கப்படும். அதே போன்று அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர் ஆகிய தாலுகாக்களில் ஆட்டுப்பண்ணை வைக்கப்பட உள்ளது. மாட்டுப் பண்ணைக்காக வங்கி மூலம் ரூ.52 கோடியே 8 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆட்டுப்பண்ணைக்காக ரூ.17 கோடியே 49 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,302 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) நவீன்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.