அரியலூர்-பெரம்பலூரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் 174 பேர் கைது

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூர்-அரியலூரில் மறியல் போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்-பெரம்பலூரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் 174 பேர் கைது
Published on

அரியலூர் ,


இதேபோல் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் பஸ் நிலையம் நுழைவு வாயில் முன்பு அரியலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் தலைமையில், நகர செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் இளையராஜா உள்ளிட்ட அக்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தலைமையில், போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் ஒரு பெண் உள்பட 52 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் மாலையில் விடுவித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும். அப்படி இல்லையெனில் தமிழக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த பின், பேரவை முன்பு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசாரால் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. கட்சியினர் தமிழகம் முழுவதும் நேற்று மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் திடீரென்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில், நகர செயலாளர் பிரபாகரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட அக்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். தி.மு.க. நடத்திய மறியல் போராட்டத்தால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாமால் உள்ளேயே அணி வகுத்து நின்றன. மேலும் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து அவர்களிடம் போலீசார் மறியலை கைவிடவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர்.

இந்நிலையில் மறியல் போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேன்களில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் 60 பேரையும் போலீசார் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். நேற்று மதியம் திடீரென்று தி.மு.க.வினர் நடத்திய மறியல் போராட்டத்தால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து செந்துறை அண்ணா சிலை முன்பு தி.மு.க. செயலாளர்கள் ஞானமூர்த்தி, செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஆண்டிடம் ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர்கள் தருமதுரை, ரெங்கமுருகன் தலைமையில் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனை வரையும் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com