காதலை ஏற்க மறுத்த ஆயுதப்படை பெண் போலீஸ் மீது தாக்குதல்

வேலூரில் காதலை ஏற்க மறுத்த ஆயுதப்படை பெண் போலீசை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 5 பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதலை ஏற்க மறுத்த ஆயுதப்படை பெண் போலீஸ் மீது தாக்குதல்
Published on

வேலூர்,

வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், வேலூர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (வயது 24) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். திலீப்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலை, அந்த பெண் போலீசிடம் தெரிவித்துள்ளார். அவரின் காதலை, அவர் ஏற்க மறுத்துள்ளார். திலீப்குமார் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து பெண் போலீசுக்கு தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் 21-ந் தேதி இரவு வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் அணுகுச்சாலையில் அந்தப் பெண் போலீஸ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குக் குடும்பத்துடன் வந்த திலீப்குமார் திடீரெனப் பெண் போலீசை வழிமறித்து மீண்டும் காதலிக்கும் படி கூறி உள்ளார். அப்போதும் அந்தப் பெண் போலீஸ், அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது திலீப்குமார், அவரது தந்தை பாலசந்தர், தாய் ரஜிலா மற்றும் அவரது குடும்பத்தினர் பானுபிரியா, அபினயா, விக்கி ஆகியோர் சேர்ந்து பெண் போலீசை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வேலூர் வடக்குப் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திலீப்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com