சேலத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் - முதல்நாளில் 3,630 இளைஞர்கள் திரண்டனர்

சேலத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. முதல்நாளில் 3 ஆயிரத்து 630 இளைஞர்கள் திரண்டனர்.
சேலத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் - முதல்நாளில் 3,630 இளைஞர்கள் திரண்டனர்
Published on

சேலம்,

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது. இந்த முகாம் அடுத்த மாதம் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. ஆள் சேர்ப்பு முகாமில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் 34 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பதிவு செய்துள்ளனர்.

முதல்நாளான நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதாவது, ராணுவத்தில் சேர விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய பணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கியது. காந்தி விளையாட்டு மைதானம் முன்பு திரண்டிருந்த இளைஞர்கள் ஒவ்வொரு நபராக வரவழைத்து அவர்களது உயரம் சரிபார்க்கப்பட்டது. இதில் உயரம் குறைவாக இருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சரியான உயரம் உள்ளவர்கள் மட்டுமே முகாமிற்குள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து ஓட்டம், மார்பளவு, எடை உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்றது. விடிய, விடிய நடைபெற்ற இந்த ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் 3 ஆயிரத்து 630 இளைஞர்கள் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கல்வித்தகுதி அடிப்படையில் சோல்ஜர் டெக்னிக்கல், அம்யூசன், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் உதவியாளர், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தவர்கள் தனியாக அழைத்து சரிபார்க்கப்பட்டனர். பின்னர் அவர்களது கல்விச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. பிறகு பல்வேறு பிரிவுகளாக ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஓடினர். இதையடுத்து கயிறு ஏறுதல் என ஒவ்வொரு உடற்தகுதி தேர்வுகளும் நடைபெற்றது.

இதனிடையே, நேற்று காலை 5.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி, காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்தார். பின்னர், அவர் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு கோவை மண்டல இயக்குனர் ஆர்.ஜே.ரானே, ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் பிரிக்கேடியல் வி.எஸ்.சங்கியான், சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலர் பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆள்சேர்ப்பு முகாமின் ஒரு பகுதியான ஓட்டப்போட்டியை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இளைஞர்களுக்கு பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும், குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்து அங்கிருந்த ராணுவ அதிகாரிகளிடம் கலெக்டர் ரோகிணி கேட்டறிந்தார். தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.

ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் சேலம் காந்தி மைதானம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ராணுவ அதிகாரிகளை தவிர மற்றவர்கள் உள்ளே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் காந்தி மைதானத்தின் முன்புற பகுதியிலும், சாலையோரத்திலும் இரவில் தூங்கியதை காணமுடிந்தது.

சேலத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடத்துவது குறித்து இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு கோவை மண்டல இயக்குனர் கர்னல் ஆர்.ஜே.ரானே கூறியதாவது:-

சீதோஷ்ண நிலை மற்றும் அதிகளவில் இளைஞர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாலும், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்கவே இரவில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. காலை நேரத்தில் நடத்தப்பட்டால் வெப்பத்தின் காரணமாக இளைஞர்கள் ஓடுவதற்கும், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவைகளால் இளைஞர்கள் களைப்படைவார்கள் என்பவதற்காகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது. உடற்தகுதி தேர்வுகள் முடிவடைந்தவுடன் மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நாள் ஆள் சேர்ப்பு முகாமில் 3,630 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு உயரம், நீளம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதியில் முதல் நாளில் மொத்தம் 600 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com