

வெடிப்பொருட்கள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து இரும்பு துகள்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அவற்றில் ஈரான், ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்பட பல வெடிப்பொருட்கள் வெடி மருந்துகளுடன் கலந்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உரிய விசாரணைக்கு பின்னர், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், இத்தகைய வெடி மருந்துகளுடன் கூடிய ராக்கெட் லாஞ்சர் உள்பட சுமார் 7 டன் எடை கொண்ட ஆயிரத்து 628 வெடி பொருட்களை தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பாக சேமித்து வைத்து உள்ளனர்.இந்தநிலையில், மேற்கண்ட வெடிபொருட்களை உரிய அனுமதியுடன் கும்மிடிப்பூண்டி அடுத்த ராமச்சந்திராபுரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத வனத்துறைக்கு சொந்தமான காலி மைதானத்தில் ராணுவத்தினரின் உதவியோடு செயலிழக்க செய்ய திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்தனர்.
இதனையடுத்து நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருட்களில் முதற்கட்டமாக 622 வெடிபொருட்கள் காலி மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
செயலிழக்கும் பணி
இதையொட்டி, அப்பகுதியில் 6 ஆம்புலன்சு வாகனங்கள், ராணுவ டாக்டர்கள் உள்பட 6 டாக்டர்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. சம்பவ இடத்தில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது, வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் இடத்தில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து வயர்கள் மூலம் இணைப்பை ஏற்படுத்தி ராணுவத்தினர் வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், பிற்பகல் 12.10 மணியளவில் முதற்கட்டமாக சுமார் 100 வெடிபொருட்கள் ஒரு முறைக்கு 10 என்ற எண்ணிக்கையில் வெடித்து செயலிழக்க வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மற்ற வெடிப்பொருட்களும் செயலிழக்க வைக்கும் பணியையும் ராணுவத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணி 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.