

ஊட்டி,
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள் உள்ளது. அதில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 103 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் வந்து ஓட்டு போடுவதற்கான சாய்வு தளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா 2-வது அலை பரவி வருவதால், அதை கட்டுப்படுத்த வாக்குச்சாவடி அலுவலர்கள் முழு பாதுகாப்பு கவச உடை, பிரத்யேக முககவசங்களை பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி நீலகிரியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 6 அடி இடைவெளியில் தரையில் வட்டங்கள் போடப்பட்டு இருக்கிறது.
வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன் காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உள்ளே நுழைந்த பின்னர் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். வலது கைக்கு கையுறை வழங்கப்படுகிறது.
பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்று அலுவலர்கள் சரிபார்த்து ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கின்றனர். வாக்களித்த பின்னர் கையுறையை அதற்கென்று வைக்கப்பட்ட குப்பை தொட்டியில் போட வேண்டும். மீண்டும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து நேற்று கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடியின் உள்பகுதி, வெளிப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொற்று பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.