கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலெக்டர் ஆய்வு பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மாற்ற ஏற்பாடு

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை மாற்றுவதற்காக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலெக்டர் ஆய்வு பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மாற்ற ஏற்பாடு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கடலூர் அண்ணா மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கும், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் கடலூர் பஸ் நிலையத்திற்கும், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு, பல்வேறு அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு முடியும் நிலையில், மேலும் நீட்டிக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.

ஆய்வு

இருப்பினும் 18-ந்தேதி முதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளது.

அதை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காய்கறி கடைகளை சமூக இடைவெளியுடன் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினர். எந்த இடத்தில் காய்கறி கடைகளை அமைப்பது, மீன், இறைச்சி கடைகளை எங்கு மாற்றுவது என்று ஆலோசனை நடத்தினர்.

முக கவசம்

பின்னர் இது பற்றி மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு மாற்ற இருக்கிறோம். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் அதிக மீன்கள் வரத்து இருக்கும். இதனால் இங்கு மீன் அங்காடி திறக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இறைச்சி கடைகள் ஏற்கனவே உள்ளது. இங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் அதை எதிர்கொள்ள பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவு வேண்டும் என்றார்.

ஆய்வின் போது கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் செல்வக்குமார், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் குமரன், நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com