

விழுப்புரம்,
விழுப்புரம் சீனிவாசா நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 62), ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி. இவரும், தூத்துக்குடியை சேர்ந்த செல்வின் என்பவரும் நண்பர் ஆவர். செல்வின் மூலமாக திண்டிவனம் முருகம்பாக்கத்தை சேர்ந்த நாராயணன் மகன் சரவணன் (38) என்பவர் கிருஷ்ணமூர்த்திக்கு அறிமுகமானார்.
பின்னர் அவர், கிருஷ்ணமூர்த்தியிடம் சகஜமாக பழகினார். அந்த சமயத்தில் சரவணன், தன்னிடம் விலை உயர்ந்த பழங்கால உலோக பொருட்கள் இருப்பதாகவும், அவை பல கோடி ரூபாய் மதிப்புடையது என்று செல்வினிடம் கூறினார். மேலும் அவர், அந்த பொருட்கள் தேவையென்றால் பணம் செலவாகும் என்றும் கூறி உள்ளார்.
இதுசம்பந்தமாக கிருஷ்ணமூர்த்தி வீட்டில் வைத்து செல்வினும், சரவணனும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டனர். பின்னர் செல்வின் சார்பாக கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் இருந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை சரவணனிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்ற சரவணன், அந்த உலோக பொருட்களை செல்வினிடம் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திண்டிவனம் கல்லூரி சாலையில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற சரவணனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.