

மணல் சிற்பம், மர சிற்பம், கல் சிற்பம், கண்ணாடி சிற்பம், பிளாஸ்டிக் சிற்பம், கான்கிரீட் சிற்பம் என விதவிதமான சிற்ப வேலைப்பாடுகளில் தங்கள் கைவண்ணத்தை பதிக்கும் சிற்பிகள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மாறுபட்டு தெரிகிறார், ஆர்.சோமசுந்தரம்.
துருப்பிடிக்காத இரும்புத் தகடுகளில் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) ஓவியம் வரைவது போல சிற்பங்களை அழகாக உருவாக்குகிறார். கூர்மையான முனைகளை கொண்ட பலவகையான இரும்பு ஆணிகள்தான் இவருடைய சிற்ப ஆயுதம். சிற்பம் உருவாக்குவதற்கு ஏற்ப சில இரும்பு ஆணி முனைகளை இவரே தயார் செய்திருக்கிறார். அவற்றை கொண்டு சுவர் களுக்கு பெயிண்ட் தீட்டுவது போல இரும்பு ஆணிகளை கொண்டு உரசியே படைப்புகளை உருவாக்கிவிடுகிறார். மூன்று எம்.எம். கன அளவு கொண்ட இரும்பு தகடுகளை ஒரு எம்.எம். கன அளவு வரை சுரண்டியே பட்டை தீட்டிவிடுகிறார். தன்னுடைய சிற்பங்களை மேலோட்டமாக பார்ப்பவர்களிடம் இது கைவிரல்களை பயன்படுத்தி செய்ததுதான் என்று கூறினால் நம்ப மாட்டார்கள் என்றும் சொல்கிறார். அவர் சொல்வது போலவே ஒவ்வொரு சிற்பங்களும் அவருடைய கடின உழைப்பையும், சிற்ப கலை ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் விதமாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அழகுற அமைந்திருக்கின்றன.