செயற்கை மணல் தயாரிப்பு தொட்டிகளை அழிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது

திருப்பத்தூர் அருகே செயற்கை மணல் தயாரிப்பு தொட்டிகளை அழிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
செயற்கை மணல் தயாரிப்பு தொட்டிகளை அழிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரை பகுதியில் செயற்கை மணல் தயாரிப்பு அமோகமாக நடக்கிறது. சட்ட விரோதமாக நடக்கும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுரேஷ்குமார் என்பவர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை சமாதானப்படுத்திய சப்-கலெக்டர் பிரியங்கா நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள செயற்கை மணல் தயாரிப்பு தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வருவாய்த்துறையினருக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து காக்கங் கரை, கிருஷ்ணாபுரம், நத்தம் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி ஊழியர்களுடன் செயற்கை மணல் தயாரிப்பு தொட்டிகளை அழிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் மணல் தயாரிப்பு தொட்டிகள் அகற்றப்பட்டன. இப்பணி காலை முதல் இரவு வரை தொடர்ந்து நீடித்தது. இதனையொட்டி கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில், 40 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், அப்பகுதியில் 27 செயற்கை மணல் தயாரிப்பு தொட்டிகள் இருக்கிறது, அவற்றை தரைமட்டமாக்கும் பணி தொடங்கியுள்ளது. நாளைக்குள்(இன்று) அனைத்து பணிகளும் முடியும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பேரில் கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர். வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால், இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com