மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை அறுபத்து மூவர் வீதி உலா

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழாவில் இன்று தேரோட்டமும், நாளை அறுபத்து மூவர் வீதி உலாவும் நடக்கிறது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை அறுபத்து மூவர் வீதி உலா
Published on

இன்று தேரோட்டம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மை மயில் வடிவம் சிவபூஜை காட்சி, வெள்ளி சூரிய வட்டம், வெள்ளி சந்திர வட்டம், அதிகார நந்தி காட்சி, பூதன், பூதகி, தாரகாசுரன், வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி, நாகம், காமதேனு, ஆடு, சவுடல் விமானம், வெள்ளி ரிஷப வாகனம், ஐந்திருமேனி யானை வாகனங்களில் சாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று பல்லாக்கு விழா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு உற்சவர் கபாலீசுவரர், கற்பகாம்பாள் தேரில் எழுந்தருளுகின்றனர். அதன்பிறகு காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. கிழக்கு மாடவீதியிலிருந்து புறப்பட்டு, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்கு மாடவீதி வழியாக மீண்டும் கிழக்கு மாடவீதியில் உள்ள நிலைக்கு தேர் வந்தடைகிறது. மாலை 5.30 மணி அளவில் தேரிலிருந்து இறைவன் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

அறுபத்து மூவர் வீதி உலா

விழாவின் 8-வது நாளான நாளை (புதன்கிழமை) காலை திருஞானசம்பந்தர் எழுந்தருளலும், பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் 2.45 மணி அளவில் வெள்ளி விமானத்தில் கபாலீசுவரர்-கற்பகாம்பாளுடன் அறுபத்து மூவர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

63 நாயன்மார்கள் பல்லக்குகளுக்கு முன்பாக விநாயகர் மற்றும் மயிலாப்பூர் கிராமத் தேவதையான கோலவிழி அம்மன் ஆகியோர் அலங்காரமாக முன்னே செல்ல, பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் வெள்ளி விமானத்தில் கபாலீசுவரர்-கற்பகாம்பாள், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசுவரர், திருவள்ளுவர்-வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், வீரபத்திரர் சுவாமி, சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமாரசாமி ஆகியோர் தனித்தனி பல்லக்குகளில் கிழக்கு மாடவீதியிலிருந்து புறப்பட்டு தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்கு மாடவீதி வழியாக மீண்டும் கிழக்கு மாடவீதி வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை வந்து அடைகின்றனர்.

கோலவிழியம்மனிடம் ஆசி

திருவீதி உலாவில் முன்னே அலங்காரமாக வரும் மயிலாப்பூரின் கிராமதேவதையான கோலவிழியம்மனிடம் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பூசாரிகளிடம் வழங்கி கோலவிழியம்மனிடம் ஆசி பெறுவார்கள். அவரை தொடர்ந்து விநாயகர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

சப்பரத்தில் உலா வரும் அறுபத்து மூவர், இறைவனை பார்த்த வண்ணமே மாட வீதிகளில் உலா வருகின்றனர். இதுபோன்று ஒரு சில சிவாலயங்களில் மட்டும் நடக்கும் இந்த திருவிழாவை காண மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழா நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com