ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகள் வீட்டு அருகே உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி

மராட்டியத்தில் ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வீட்டு அருகே உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல முடியும் என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகள் வீட்டு அருகே உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி
Published on

மும்பை,

நாட்டின் மற்ற மாநிலங்களை விட மராட்டியம் தான் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் இதுவரை தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தலைநகர் மும்பையில் வைரசை துரத்துவோம்' திட்டத்தின் கீழ் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இந்த வைரசை கட்டுப்படுத்துவது மாநில அரசுக்கு சவாலாக இருந்து வருகிறது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் மிஷன் பிகின் அகெய்க் திட்டத்தின் கீழ் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வீழ்ச்சி அடைந்துள்ள மாநில பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமலில் இருந்த 5-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்றுமுன்தினம் அறிவித்து இருந்தார். இதன்படி மராட்டியத்தில் அடுத்த மாதம்(ஜூலை) 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மாநில தலைமை செயலாளர் அஜாய் மேத்தா நேற்று பிறப்பித்தார். அதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது.

பொதுமக்கள் முககவசங்கள் அணிவது, சமூக விலலை கடைப்பிடித்தல் அவசியம். தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 10 சதவீத ஊழியர்கள் அல்லது குறைந்தபட்சம் 10 ஊழியர்களை கொண்டு தான் செயல்பட வேண்டும். முடிந்தவரை ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.

அவசரம், மருத்துவம், வருவாய், பேரிடர் மேலாண்மை, போலீஸ், என்.ஐ.சி., உணவு மற்றும் சிவில் வழங்கல், எப்.சி.ஐ., என்.ஒய்.கே., நகராட்சி சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களும் 15 சதவீத ஊழியர்கள் அல்லது 15 ஊழியர்களை கொண்டு தான் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளை தவிர்த்து, பக்கத்து பகுதிகளுக்கு கடைக்கு செல்லவோ, வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அவசியமின்றி செல்லவோ கூடாது. வீட்டு அருகே உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல வேண்டும். அலுவலகங்கள் மற்றும் மருத்துவ காரணங்கள், அவசர தேவைக்கு செல்பவர்கள் மட்டும் தொலைவான பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.

வணிக வளாகம் தவிர அனைத்து அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும். ஆன்லைன் வர்த்தக செயல்பாடுகள், வீடுகளுக்கு கொண்டு உணவு வினியோகம் செய்தல் ஆகியவை அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com