கடலை எண்ணெய் என விற்பனைக்கு வைக்கப்பட்ட 1,310 லிட்டர் பாமாயில் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூரில் கடலை எண்ணெய் என விற்பனைக்கு வைக்கப்பட்ட 1,310 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடலை எண்ணெய் என விற்பனைக்கு வைக்கப்பட்ட 1,310 லிட்டர் பாமாயில் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லடம் ரோடு பகுதியில் உள்ள எண்ணெய் விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்களில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மணி, கேசவராஜ் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள ஸ்ரீசெல்வராணி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் பாமாயிலை கடலை எண்ணெய் என்று பாக்கெட்டுகளில் அடைத்தும், பாமாயிலை சமையல் எண்ணெய் என்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-க்கு முரணாக விதிகளை மீறி, பொதுமக்களின் நுகர்வுக்காக விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அங்கிருந்த 1,310 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்டுகளில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு அறிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பாமாயிலின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

பகுப்பாய்வு அறிக்கை முடிவின்படி உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com