காங்கிரஸ் சார்பில் 27-ந் தேதி பேரணி அசோக் சவான் அறிவிப்பு

ரபேல் போர்விமான ஊழல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக்கோரி மும்பையில் வருகிற 27-ந் தேதி பேரணி நடத்தப்போவதாக காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் அறிவித்து உள்ளார்.
காங்கிரஸ் சார்பில் 27-ந் தேதி பேரணி அசோக் சவான் அறிவிப்பு
Published on

மும்பை,

ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில், உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக எங்களுக்கு வேறு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

இது ரபேல் ஊழல் வழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து மராட்டிய காங்கிரசார் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்து மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய பாதுகாப்பு என்ற முகமூடியில் ரபேல் ஊழல் குறித்த உண்மைகளை மறைக்கும் முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டனர்.

மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் மக்களை தவறான முறையில் வழிநடத்தியதுடன், பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஊழல் முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்கள் இருவரும் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

மேலும் இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 27-ம் தேதி காங்கிரஸ் சார்பில் மும்பையில் பேரணி நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ரபேல் ஊழல் விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும் இது தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com