திருத்தணி, பள்ளிப்பட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு

திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் அரசு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது,
திருத்தணி, பள்ளிப்பட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று திருத்தணியில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்றது. திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கேபில் சுரேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கெமினாகிரானப் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக கவசம், கிருமிநாசினி, வழங்கப்பட்டு அவர்கள் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர்.

இதில் சில மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்றும், பலர் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது என்றும் கருத்துகளை தெரிவித்தனர். இதேபோல் பள்ளிப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் மணி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சந்திரபாபு முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்களில் 30 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், 70 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க கூடாது என்றும் கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பி.ஜெயவேலு, துணைத்தலைவர் சேகர், சங்க இயக்குனர்கள் முருகேசன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருண் பள்ளிகளை 16-ந் தேதி திறப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கிய படிவத்தில் தங்கள் கருத்தினை பதிவு செய்து தங்கள் கையொப்பம் இட்டு அதனை பள்ளி தலைமை ஆசிரியரிடம் அளித்தனர்.

அதேபோல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் தலைமையாசிரியர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூபாலன், பொருளாளர் பொன்னுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளை 16-ந் தேதி திறக்கலாமா என்பது குறித்து வழங்கப்பட்ட படிவத்தில் தங்கள் கருத்தினை பதிவு செய்து அளித்து விட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com