செய்யாறு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் பேச்சுவார்த்தை நடத்த வந்த திட்ட இயக்குனரையும் முற்றுகை

செய்யாறு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட திட்ட இயக்குனரையும் அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் பேச்சுவார்த்தை நடத்த வந்த திட்ட இயக்குனரையும் முற்றுகை
Published on

செய்யாறு,

செய்யாறு தாலுகா பாராசூர் கிராமத்தில் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு கிணற்றிலிருந்தும், ஆழ்துளை கிணறு மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியான சூழ்நிலையில் கிணறு வறண்டு விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.

நேற்று செய்யாறு பகுதியில் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக வந்திருந்தார். பாராசூர் கிராம மக்கள் குடிநீர் கேட்டு மறியல் செய்வதை அறிந்த அவர் மறியல் நடந்த இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றார். அப்போது அவரையும் பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தும் சிறிது நேரம் கூட தண்ணீர் வருவதில்லை. கிணறு வற்றிவிட்டதால் குடிப்பதற்கு நீரின்றி தவிக்கிறோம் என்றனர். இதனை தொடர்ந்து அவர் வறட்சியால் வற்றிய சம்பந்தப்பட்ட கிணற்றையும், புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மின்மோட்டார் இயக்கிட செய்து ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கிறதா என பார்வையிட்டார். அப்போது தண்ணீர் வரவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து தண்ணீர் செந்நிறத்தில் வந்தது. சிறிது நேரத்தில் அந்த தண்ணீரும் நின்று விட்டது.

வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவர்களிடம் திட்ட இயக்குனர் ஜெயசுதா நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com