

திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு வாலிபர் தனது உறவினர்கள் சிலருடன், மனு கொடுப்பதற்கு ஒரு பையுடன் வந்தார். கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு வந்த போது, திடீரென பையில் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தார். மேலும் பாட்டிலை திறந்து மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு வாலிபரை மீட்டனர். பின்னர் அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டுக்கல் கிழக்கு தாலுகா கூவனூத்து அருகே உள்ள கவராயபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமர் (வயது 34) என்பது தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம், வாலிபர் ராமர் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான நிலத்துக்கு மற்றொரு நபர் பட்டா வாங்கி உள்ளார். மேலும் அந்த நபர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, அந்த பட்டாவை ரத்து செய்து விட்டு, எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன். எனினும், இதுவரை எனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன், என்றார்.
இதையடுத்து போலீசார் மேல் விசாரணைக்காக ராமரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.