

பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அக்கட்சி தன்வசம் இருந்த 12 தொகுதிகளில் 10 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது. இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. நான் தீவிரமாக பிரசாரம் செய்தேன். ஆனால் எங்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஒப்புக்கொள்கிறேன்.
இடைத்தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ஜனநாயகத்தின் மாண்புகளை மதித்து, கட்சியின் நலன் கருதி நான் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளேன். கர்நாடக மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவருக்கு எனது ராஜினாமா கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளேன். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இடைத்தேர்தலில் மக்களின் முடிவை கண்டு சித்தராமையா மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளார். நிருபர்கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு கூட அவர் பதிலளிக்கவில்லை. இந்த கருத்தை மட்டும் அவர் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.