

திருச்சி,
திருச்சி திருவானைக்காவலில் நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மின் இணைப்பு வழங்க லஞ்சம்
திருச்சி திருவானைக்காவல் அய்யன்தெருவை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு மும்முனை மின் இணைப்பு கேட்டு ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள திருவானைக்காவல் பிரிவு அலுவலகத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்து இருந்தார்.
அவருக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு
புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், நவநீதகிருஷ்ணன், அருள்ஜோதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் முதல் தவணையாக ரசாயன பொடி தடவிய ரூ.30 ஆயிரத்தை உதவி பொறியாளர் ராஜேந்திரனிடம் கொடுக்கும்படி பழனியப்பனிடம் அறிவுறுத்தினர்.
அதன்படி அவரும் உதவி பொறியாளர் ராஜேந்திரனிடம் லஞ்ச பணத்தை கொண்டு வருவதாக கூறினார். உடனே அவரை, நேற்று மதியம் பணத்துடன் திருவானைக்காவல் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும்படி ராஜேந்திரன் கூறி உள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பழனியப்பன் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.
மின்வாரிய உதவி பொறியாளர் கைது
அப்போது அங்கு மறைந்து நின்று கண்காணித்து கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை மின்வாரிய அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அங்கு ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு, அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கல்கண்டார் கோட்டையில் உள்ள உதவி பொறியாளர் ராஜேந்திரன் வீட்டிலும் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.