ஜோலார்பேட்டை பகுதியில் திறக்கப்பட உள்ள மினி கிளினிக் இடங்களை இணை இயக்குனர் ஆய்வு

ஜோலார்பேட்டை நகரம், ஒன்றிய பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மினி கிளினிக் இடங்களை சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மினி கிளினிக் இடங்களை சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்
மினி கிளினிக் இடங்களை சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்
Published on

சென்னை அதிகாரி ஆய்வு

தமிழகத்தில் 2000 மினி கிளினிக்கை திறக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை நகரம், ஒன்றிய பகுதிகளில் 3 இடங்களை தேர்வு செய்து, அங்கு மினி கிளினிக் திறக்க சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஜோலார்பேட்டை நகரில் இடையம்பட்டி பகுதியில் உள்ள பழைய நகராட்சி கட்டிடத்தில் மினி கிளினிக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அதேபோல் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பொன்னேரி துணைச் சுகாதார நிலையத்தில், சந்திரபுரம் பகுதியில் உள்ள துணைச் சுகாதார நிலையத்தில் மினி கிளினிக் திறக்கப்பட உள்ளது. சுகாதாரத்துறை சென்னை இணை இயக்குனர் சம்பத் நேற்று காலை ஜோலார்பேட்டைக்கு வந்து, மேற்கண்ட பகுதிகளில் திறக்கப்பட உள்ள மினி கிளினிக் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

630 மினி கிளினிக்

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 2000 மினி கிளினிக் திறக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல் கட்டமாக 15-ந்தேதி தமிழகத்தில் 630 மினி கிளினிக் திறக்கப்பட உள்ளன. அதன்பிறகு படிப்படியாக மினி கிளினிக் திறக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மினி கிளினிக் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ அலுவலர் என 3 பேர் பணிகளை மேற்கொள்வார்கள். மினி கிளினிக் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரையிலும் செயல்படும், என்றார்.

ஆய்வின்போது திருப்பத்தூர் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பி.சுமதி, ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி, அரசு டாக்டர்கள் சுமன், புகழேந்தி, ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் கோபி, கிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com