

மேல்மலையனூர்
செஞ்சி தாலுகாவுக்கு உட்பட்ட மேல்மலையனூர், அவலூர்பேட்டை மற்றும் சாத்தாம்பாடி குறுவட்டங்கள் தனியாக பிரிக்கப்பட்டு, மேல்மலையனூரை தலைமையிடமாக கொண்டு புதிதாக தாலுகா உருவாக்கப்பட்டது. இதற்காக வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த தாலுகா அலுவலகத்துக்கு என புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் இடம் தேர்வு செய்து, ரூ.2 கோடியே 32 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்துக்கான புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது திண்டிவனம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகவேல், செஞ்சி உதவி செயற்பொறியாளர் மாலா, தாசில்தார் பரமேஸ்வரி, சமூக நல பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலெக்சாண்டர், மண்டல துணை தாசில்தார் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் கேசவன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.