திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது பரபரப்பு தகவல்கள்

திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது பரபரப்பு தகவல்கள்
Published on

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் சிட்டி யூனியன் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் லோகி கேஸ் ஏஜென்சி நிறுவனத்தினர் பணம் பெற்று துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் ஊழியர்களான முசிறியை சேர்ந்த சரவணன் (வயது 38), திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தை சேர்ந்த அருண் (33) ஆகியோர் கடந்த 20-ந் தேதி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு பணம் வாங்க வந்தனர். அப்போது வங்கியில் கவுண்ட்டரில் ரூ.16 லட்சத்தை பெற்று அதனை ஒரு பையில் வைத்தனர். தொடர்ந்து 2-வதாக ரூ.18 லட்சம் பெறும் முனைப்பில் ஊழியர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் யாரும் கவனிக்காத வகையில், ரூ.16 லட்சம் வைத்திருந்த பையை மர்மநபர் கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணை

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் கோபாலச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வங்கி மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தீவிரமாக விசாரித்தனர்.

இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று முன்தினம் ஒருவர் சிக்கினார். அவர் குடிபோதையில் ஆட்டோவில் பையுடன் சந்தேகத்துடன் சுற்றியதால் ஆட்டோ டிரைவர் முருகையா என்பவர் பிடித்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

கைது

அவரிடம் போலீசார் விசாரித்ததில் திருச்சி பாலக்கரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டீபன் (42) என்பது தெரியவந்தது. அந்த பையில் இருந்த பணத்தை எண்ணியதில் மொத்தம் ரூ.12 லட்சத்து 97 ஆயிரத்து 200 இருந்தது தெரியவந்தது. இந்த பணம் வீட்டை விற்றதில் கிடைத்த பணம் என்று போலீசாரிடம் ஸ்டீபன் தெரிவித்தார். இருந்தாலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. திருச்சி மாநகர போலீசாருக்கு பெரம்பலூர் போலீசார், ஸ்டீபன் சிக்கியிருப்பது குறித்து தகவல் தெரிவித்து விசாரித்தனர்.

இதில் திருச்சியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவராக இருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் ஸ்டீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்குமூலம்

மேலும் அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடித்தது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது:-

சத்திரம் பஸ் நிலையம் அருகே சிட்டி யூனியன் வங்கி கிளை முன்பு நான் தீபாவளி பண்டிகையின்போது செருப்பு கடை போட்டிருந்தேன். அந்த நேரத்தில் வங்கிக்கு பணம் எடுக்க அதிகம் பேர் வருவது உண்டு. மேலும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களும் வருவதை கவனித்துள்ளேன். கடந்த ஒரு மாதமாக வங்கி முன்பு இருந்து நோட்டமிட்டேன். அப்போது ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக பணம் எடுக்க வரும் ஊழியர்கள் சாதாரணமாக பைகளை வாங்கி வைத்துவிட்டு இருப்பதை அறிந்தேன். சம்பவத்தன்றும் அவர்கள் 2 பேரும் பணத்தை வாங்கி ஒரு பையில் வைத்தனர். அப்போது நான் வங்கியில் இருந்து அந்த பையை எளிதில் தூக்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்.

மது குடித்து...

வங்கி முன்பு இருந்த ஒரு ஆட்டோவை பிடித்து தலைமை தபால் நிலையம் சென்றேன். பின்னர் அங்கிருந்து பெரம்பலூருக்கு பஸ் பிடித்து சென்றேன். பெரம்பலூரில் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கினேன். மேலும் மது குடித்து உல்லாசமாக இருந்தேன். இதற்கு கொள்ளையடித்த பணத்தையே பயன்படுத்தினேன். இந்த நிலையில் ஆட்டோவில் சென்று விடுதியில் அறை எடுக்க சென்ற இடத்தில் என்மேல் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் என்னை போலீசில் ஒப்படைத்ததால் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com