திருவொற்றியூரில் தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு; மூச்சுத்திணறலால் கொரோனா நோயாளிகள் அவதி தொழிற்சாலை முன்பு உறவினர்கள் முற்றுகை

திருவொற்றியூரில் தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். இதனால் அவர்களது உறவினர்கள், ஆக்சிஜன் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
திருவொற்றியூரில் தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு; மூச்சுத்திணறலால் கொரோனா நோயாளிகள் அவதி தொழிற்சாலை முன்பு உறவினர்கள் முற்றுகை
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆகாஷ் என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வழங்கப்படும் ஆக்சிஜன் கிடைக்காததால் ஆஸ்பத்திரியில் இருப்பு வைத்திருந்த ஆக்சிஜனும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள்.

இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம், தங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் நோயாளிகளை வெளியேற்றிவிடுவோம் என்று கூறிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகளின் உறவினர்கள், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கரிடம், தங்களுக்கு மணலி விரைவு சாலை எம்.எப்.எல். சந்திப்பு அருகே உள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் பெற்று தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக அவரும் தொழிற்சாலைக்கு விரைந்து சென்றார். அதற்குள் நோயாளிகளின் உறவினர்கள், ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிருக்கு போராடுவதாக கூறி அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு கதறி அழுதனர்.

தொழிற்சாலைக்குள் சென்ற கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. தொழிற்சாலை அதிகாரிகளிடம் உள்ளூர் மக்களின் உயிரை காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும்படி கேட்டுகொண்டார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் இது தொடர்பாக தொலைபேசியில் பேசினார்.

அவரும் உடனடியாக தொழிற்சாலை மேலாண்மை இயக்குனரை தொடர்பு கொண்டு ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச்சென்று தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய தொகுதி எம்.எல்.ஏ.வை நோயாளிகளின் உறவினர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com