பவானி-கொடுமுடியில் மகாளய அமாவாசைக்கு திதி, தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை - கலெக்டர் சி.கதிரவன் தகவல்

மகாளய அமாவாசை தினத்தில் திதி-தர்ப்பணம் செய்வதற்காக ஆற்றங்கரைகளில் கூடக்கூடாது என்று கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பவானி-கொடுமுடியில் மகாளய அமாவாசைக்கு திதி, தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
Published on

ஈரோடு,

தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகியவை மிக சிறப்புக்கு உரியவையாகும். இந்த நாட்களில் முன்னோருக்கு திதி கொடுப்பது சிறப்புக்கு உரியது. அதன்படி மகாளய அமாவாசை நாளை (வியாழக்கிழமை) வருகிறது.

தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே மகாளய அமாவாசை தினத்தில் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மகாளய அமாவாசை தினத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் செய்து புனித நீராடுவதற்காக பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பகுதிகளுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரே இடத்தில் அதிகம்பேர் கூடுவதால் நோய்தொற்று பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை, கொடுமுடி மற்றும் காவிரி, பவானி ஆற்றங்கரைகளில் உள்ள புனித- புண்ணியதலங்களில் பொதுமக்கள் கூடி திதி, தர்பண பூஜைகள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்ட குறைந்த அளவு பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்யலாம்.

தடை உத்தரவை மீறி யாரேனும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com