அருப்புக்கோட்டையில் பரபரப்பு; வீட்டில் இருந்த பொருட்களை ரோட்டில் வீசி நிர்மலாதேவி திடீர் ரகளை

பேராசிரியை நிர்மலாதேவி தனது வீட்டில் இருந்த பொருட்களை ரோட்டில் வீசி திடீர் ரகளையில் ஈடுபட்டார். கார் மீது கற்களை வீசியதில் கண்ணாடி நொறுங்கியது.
அருப்புக்கோட்டையில் பரபரப்பு; வீட்டில் இருந்த பொருட்களை ரோட்டில் வீசி நிர்மலாதேவி திடீர் ரகளை
Published on

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி, மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோரும் கைதானார்கள்.

6 மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜாமீனில் வந்த பின்னர் நிர்மலாதேவியின் நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட்டது. சில நேரங்களில் தானாக பேசிக்கொள்வது, வினோதமான செயல்களில் ஈடுபடுவது என்று இருந்து வந்தார். கோர்ட்டில் ஆஜராகும் போதும் நிர்மலாதேவியின் பல்வேறு நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை கைவிட்டதாகவும், இதனால் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன்நகரில் உள்ள வீட்டில் நிர்மலாதேவி தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென அவர் ரகளையில் இறங்கினார். தனது வீட்டில் இருந்த பாத்திரங்கள் மற்றும் நாற்காலி போன்ற பொருட்களை எடுத்து ரோட்டில் வீசினார். மேலும் கற்களையும் எடுத்து வீசினார்.

இதில் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த தங்கபிரகாஷ் என்பவரின் கார் கண்ணாடி நொறுங்கியது. இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் அன்னராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். நிர்மலாதேவி மன நல பாதிப்பால் இந்த செயலை செய்தாரா? அல்லது வேண்டுமென்றே பொருட்களை ரோட்டில் வீசி பரபரப்பை ஏற்படுத்தினாரா? என விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com