காஞ்சீபுரம், திருவள்ளூரில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

காஞ்சீபுரம், திருவள்ளூரில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம், திருவள்ளூரில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
Published on

காஞ்சீபுரம்,

முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். வேலையில்லாமையை போக்கிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் தொழிற்சங்க அங்கீகார சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சீபுரம் தேரடியில் இருந்து ஏராளமான தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக காந்திரோட்டை அடைந்தனர். பின்னர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.வை சேர்ந்த ஸ்ரீதர், எல்.பி.எப்.பை சேர்ந்த இளங்கோவன், எ.ஐ.டி.யு.சி.யை சேர்ந்த மூர்த்தி, கைத்தறி சங்கத்தை சேர்ந்த ஜீவா, தையல் சங்கத்தை சேர்ந்த வசந்தா, சி.ஐ.டி.யு.வை சேர்ந்த எம்.ஆறுமுகம், எல்.பி.எப்.பை சேர்ந்த சுந்தரவதனம் உள்பட 165 பேரை கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே இருநது தொழிற்சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர், இதனால் போரட்டம் நடத்தியவர்கள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகே இருந்து கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக சென்ற தொழிற்சங்கத்தினர் திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து 5 வேன் மற்றும் ஒரு பஸ் மூலம் கொண்டு சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான உழவர் சந்தை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சாலை மறியல் செய்ததாக 280 தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் காரணமாக அந்த வழியாக மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com