கன்னியாகுமரி கடலில் சூறாவளி காற்றில் சிக்கி, விசைப்படகில் தத்தளித்த 10 பேர் மீட்பு

கன்னியாகுமரி கடலில் சூறாவளி காற்றில் சிக்கி விசைப்படகில் தத்தளித்த 10 பேர் மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி கடலில் சூறாவளி காற்றில் சிக்கி, விசைப்படகில் தத்தளித்த 10 பேர் மீட்பு
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு, கடலில் நீராடி, சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்வார்கள். மேலும், கடலில் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு மூலம் சென்று சுற்றி பார்ப்பார்கள்.

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு அவ்வப்போது படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.

நேற்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

காலை 9 மணிக்கு சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, விவேகானந்தர் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சுற்றுலா பயணிகள் அவசரம், அவசரமாக திருப்பி அழைத்து வரப்பட்டனர்.

சூறாவளியில் சிக்கிய படகு

குளச்சலை சேர்ந்த ஒரு விசைப்படகில் 10 பேர் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பார்க்க வந்தனர். அவர்கள் திருவள்ளுவர் சிலை பாறையின் அருகே சென்ற போது, படகு சூறாவளி காற்றில் சிக்கியது. இதனால், அந்த படகு பாறைகளின் இடையே மாட்டிக்கொண்டது. அதில் இருந்த 10 பேரும் கரை திரும்ப முடியாமல் தத்தளித்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவேகானந்த கேந்திராவுக்கு சொந்தமான படகு மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் படகில் சென்று கடலில் தத்தளித்த 10 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மதியம் 2.30 மணியளவில் கடல்சீற்றம் தணிந்தது. இதையடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. திருவள்ளுவர் சிலைக்கு நேற்று முழுவதும் படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com